உடலில் வைட்டமின் B12 சத்து குறையும் பட்சத்தில் வாய்ப்புண் ஏற்படும். செரிமான கோளாறு மற்றும் மலம் இறுகுதல் போன்ற சமயங்களில் வாய்ப்புண் உருவாகும். வயிற்றில் கழிவுகளின் தேக்கம் அதிகமாக இருக்கும் போதும் வாய்ப்புண் வந்துவிடும். வாய்ப்புண் என்பது ஒரு குறைபாடே தவிர, நோயல்ல. வாய்ப்புண் இருக்கும் நாட்களில் கார உணவு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. குறைந்தது 3 லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். மணத்தக்காளி கீரை ஜூஸ் அல்லது கடைசல் அல்லது சூப் அருந்துவது வாய்ப்புண்ணுக்கு மிகச்சிறந்த நிவாரணி. தேங்காய் பால் அருந்தலாம் அல்லது கொப்பளித்துத் துப்பலாம். வேப்பிலை கொழுந்து அல்லது இளம் வேப்பிலையை கொதிக்க வைத்து அதன் நீரை கொப்பளித்துத் துப்பலாம். மாதுளம் பழம் தோலை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.